வேலூர் மாவட்டம் சோளிங்கரையடுத்த பாண்டியநெல்லூரில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், மருதாலம் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், சோளிங்கரைச் சேர்ந்த சம்பத் ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்து விட்டு, கடையை பூட்டிவிட்டுச்சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் நேற்று அதிகாலை சோளிங்கர் காவலர்கள் ரோந்துப் பணியில் இருந்தபோது, பாண்டியநெல்லூர் மதுபானக்கடையின் பின்புறச் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை இருப்பதைக் கண்டனர். பின்னர், இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளருக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து வந்த கடையின் மேற்பார்வையாளர், கடையைத் திறந்து பார்த்த போது, விற்பனைக்காக வைத்திருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து மதுபானக்கடையின் மேற்பார்வையாளர் செந்தில்குமார், சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சோளிங்கர் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : கஞ்சா விற்ற சட்டக் கல்லூரி மாணவன் கைது!