வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பெரிய பேட்டைப் பகுதியில் பத்மாவதி என்பவருக்குச் சொந்தமான கடையில் கடந்த 14 வருடங்களாக நடுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் உரிமையாளர் கடையை வேறு ஒருவருக்கு விற்பனை செய்யவுள்ளதாகவும் கடையை காலி செய்யும்படியும் ஒருவருடமாக சந்திரசேகரிடம் கூறியும் அவர் கடையை காலி செய்யாமல் தொடர்ந்து கடையை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கடையின் உரிமையாளர் பத்மாவதி அதேபகுதியை சேர்ந்த வாகித் என்பவற்கு கடையை மூன்று மாதங்களுக்கு முன் விற்பனை செய்துள்ளார்.
கடையை வாங்கிய வாகித் கடந்த மாதம் சந்திரசேகரிடம் கடையை காலி செய்யும்படி கூறியுள்ளார். சந்திரசேகர் கடையை காலி செய்யாமல் தொடர்ந்து கடையை நடத்தி வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வாகித் சந்திரசேகர் மீது வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இப்புகார் குறித்து காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக சந்திரசேகரை பலமுறை அழைத்துள்ளனர். ஆனால், சந்திரசேகர் விசாரணைக்கு காவல் நிலையத்திற்குச் செல்லாமல் தலைமறைவாக இருந்ததாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பூட்டப்பட்டிருந்த சந்திரசேகரின் கடையில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை வெளியில் வீசி கடையைச் சூறையாடி ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சந்திரசேகரை அழைத்து பேசி கடையை மீட்டு தரவேண்டும் என்றும் ஏற்கனவே காவல் நிலையத்தில் வாகித் புகார் அளித்திருந்த நிலையில் கடையை சூறையாடிய நபர்களைக் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொழிற்சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு நிகரான வளர்ச்சி - 70 ஆண்டுகளில் சாதித்த சீனா!