வேலூர் பள்ளிகொண்ட காவல்துறையினர் நேற்று (அக்டோபர் 14) இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்தபோது, அது திருட்டு வாகனம் என்றும் இருவரும் அந்த வாகனத்தை திருடி வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் தொரப்பாடியைச் சேர்ந்த ஜீவா என்பதும் மற்றொருவர் இன்பேன்றி தெருவைச் சேர்ந்த ஃபரூக் (எ) சிங்காரம் என்பதும் தெரிய வந்தது. முன்னதாக, இதுபோன்ற திருட்டு நடவடிக்கைகளை தடுப்பதற்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா மற்றும் தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தனிப்படை அலுவலர்களிடம் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இருவரும் சேர்ந்து நான்கு ராயல் என்பிஃல்ட் மற்றும் ஸ்ப்லெண்டர், ஆறு பல்சர் வகை வாகனம் என இதுவரை 14 இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. அதன் பிறகு, 14 வாகனங்களையும் கைப்பற்றிய காவால்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.