வேலூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இம்மாவட்டத்தில் கரோனாவால் நாளொன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவி வருகிறது. ஆனால் இதே மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய மூன்று ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட கரோனா நோய்த் தொற்று இல்லை.
இந்த ஊராட்சிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலைகளின் மேலேயுள்ள 70 சிறிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பான்மையினர் வெளிமாநிலங்களில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். ஏனைய மலைவாழ் மக்கள் தங்களது சொந்த கிராமங்களில் ஆடு, மாடு மேய்த்தல், தேனெடுத்தல், விறகு வெட்டுதல் விவசாயக் கூலி உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனாவுக்கு நோ!
அணைக்கட்டு தாலுகாவில் நாள்தோறும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இம்மூன்று ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று உறுதியாகவில்லை. இங்கு வசிக்கும் மக்கள் அநாவசியமாக மலையை விட்டு கீழே இறங்குவதில்லை என்பது அதற்கு முக்கிய காரணம்.
ஊரடங்கிற்கு முன்னர், இக்கிராம மக்கள் வாரம் ஒருமுறை நடக்கும் வார சந்தைக்கு செல்வதற்காக கீழே இறங்கி வருவர். தற்போது ஊரடங்கு நடவடிக்கையாக அனைத்து வாரச் சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால், ஒடுக்கத்தூர் கடைகளிலேயே பொருள்களை வாங்கி விட்டு மலைகளுக்கு திரும்பி விடுகின்றனர்.
இது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டபோது, கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இல்லாததாலேயே மலைவாழ் மக்கள் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் உள்ளதாகத் தெரிவித்தனர். அநாவசியமாக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தால் கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு இந்த மலை கிராம மக்களே முன்மாதிரி.
இதையும் படிங்க: மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை!