வேலூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையர் தலைமையில் நான்கு மண்டல அலுவலர்கள் பணிபுரிகின்றனர். மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் மாநகராட்சியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் கடந்த 4ஆம் தேதி திடீரென திருச்சி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதே நாளில் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலர்களை இடமாற்றம் செய்து ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பல்வேறு பின்னணிகள் இருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மண்டல அதிகாரிகள் சிலருக்கும், ஆணையருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் கமிஷன் உள்ளிட்ட விஷயங்களில் பனிப் போர் நடந்து வந்ததாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது மண்டல அதிகாரி மதிவாணனுக்கும் ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கும் பல நாட்களாக மோதல் போக்கு இருந்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே போகிற போக்கில் மண்டல அதிகாரிகளை ஆணையர் இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இது வேலூர் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் புதிய ஆணையராக கிருஷ்ணமூர்த்தி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க: செல்ஃபோன் டவர் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம்