சாதி இல்லை, சாதி ஒழிப்பு என்ற அடிப்படை கொள்கையில் பயணிக்கும் திராவிடக் கட்சிகள் தேர்தல் வெற்றிக்காக வேட்பாளர்களை சாதி அடிப்படையில் நிறுத்தி வருகிறது. இதற்கான தீர்வு குறித்து தனது கருத்து வைக்கிறார் முன்னாள் அமைச்சரும், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜி. விஸ்வநாதன்.
1949ம் ஆண்டு தந்தை பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்து கறுத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பேரறிஞர் அண்ணாவால் உறுவாக்கப்பட்ட அரசியல் கட்சிதான் திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சியின் தோற்றத்திற்கு பிறகு பல்வேறு காலகட்டங்களில் "திராவிடம்" என்ற பெயர் கொண்ட பல திராவிட கட்சிகள் இதில் இருந்து பிரிந்தும், தனியாகவும் உதித்தன.
பொதுவாக திராவிட கொள்கை என்பது சாதியத்தை எதிர்த்து, சுய மரியாதையை வலியுறுத்தும் ஒரு சித்தாந்தகமாகவே உள்ளது. இதை பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற மறைந்த மூத்த திராவிட சித்தாந்தம் கொண்ட அரசியல் தலைவர்கள் பின்பற்றி வந்தனர். இன்னும் சிலர் பின்பற்றினாலும் காலப்போக்கில் இது மாற்றம் பெற்று தற்போது திராவிடக் கட்சிகள் பலவும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் போது சாதிவாரியாக நிறுத்தி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு தொகுதியில் அப்பெரும்பான்மை சமுதாயத்தை சார்ந்த ஒரு வேட்பாளரையே திராவிடக் கட்சிகள் வேட்பாளராக நிறுத்தி வருகின்றன.
வட இந்தியாவில் மத ரீதியான பிரச்சனை:
வட இந்திய பகுதிகளை பொறுத்தவரை தேர்தலில் மத ரீதியான ஆதிக்தம்தான் இன்றும் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்த இஸ்லாமியர்களை இந்தியாவிற்கு அனுப்புவதும், இந்தியாவில் இருந்த இந்துக்களை பாகிஸ்தானிற்கு அனுப்புவதும் என்று மத ரீதியான பிரச்னைகள் அப்பகுதியில் இருந்தது. ஆனால், தென் மாநிலங்களை பொறுத்த வரை மத ரீதியான பிரிவினை என்பது கிடையாது. உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் நான் வசிக்கும் மாவட்டத்தில் 25 விழுக்காடு இஸ்லாமியர்கள் உள்ளனர் (உண்மையான வட ஆற்காடு மாவட்டத்தில்). எனக்கு தெரிந்து இதுவரை இந்த மாவட்டத்தில் இந்து இஸ்லாமியர் பிரச்னை ஏற்பட்டது இல்லை.
தென் இந்தியாவின் சாதி ரீதியான பிரச்சனை:
இந்து மதத்தில் சாதி என்பது முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. 1967 தேர்தலில் சாதி போன்ற காரணிகள் முக்கியமற்றதாக இருந்தது. நான், வேட்பாளராக நிறுத்தப்பட்டபோதெல்லாம் என்னை எந்த சாதி என்று யாரும் கேட்டது இல்லை. உங்களுக்கு சாதி ஓட்டு எவ்வளவு வரும் என்பது போன்ற கேள்வி எல்லாம் என்னிடம் கேட்டது கிடையாது. ஆனால், தற்போது சாதியும், பணமும் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது. இப்போதெல்லாம் "எவ்வளவு செலவு செய்வீர்கள், உங்களுக்கு சாதி ஓட்டு உள்ளதா என்றுதான் கேட்கின்றனர்" என்றார் சிரிப்புடன்.
திராவிட கட்சியில் சாதி ஓட்டு:
1977களில் எல்லாம் எம்.ஜி.ஆர் என்றைக்கும் சாதி குறித்து கவலைப்பட்டதே இல்லை. அந்த காலகட்டத்தில் சாதி அரசியல் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும், எம்.ஜி. ஆரின் இறப்பிற்கு பிறகு சாதி என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
என்னதான் "சாதி இல்லை, சாதியை ஒழிக்க வேண்டும்" என்று கூறினாலும் திராவிட சித்தாந்தத்தவாதிகள் சாதி ரீதியாக வேட்பாளரை நிற்க வைத்து வருகின்றனர்.
இந்த நிலை கடந்த 30 ஆண்டுகளாகதான் இருந்து வருகிறது. அப்போதெல்லாம் தேர்தலுக்கான செலவு என்பது மிகக் குறைவு. 1967 பாராளுமன்ற தேர்தலுக்கு ஆன செலவு 50 ஆயிரம்தான், 1971ல் 1 லட்சத்து 15 ஆயிரம் தான் செலவானது, இப்போதெல்லாம் லட்சத்தில் செலவு செய்தாலும் பஞ்சாயத்து தலைவராக கூட வர முடியாது.
இதற்கான தீர்வு:
இது போன்ற நிலையை மாற்ற ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால், சமூக நீதி என்பது சாதி வாரியான இட ஒதுக்கீட்டை நாடியே உள்ளது. இதை எப்படி மாற்ற முடியும் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. 1982ல் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ( அம்பா சங்கர் ஆணையம்) நான் ஒரு உறுப்பினராக இருந்தேன். அப்போது ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது ஏற்கனவே படித்தவர்கள், அல்லது வசதி படைத்தவர்களுக்கு தான் அந்த இட ஒதுக்கீடு பயன்படுகிறது, படிப்பற்ற ஏழைகளுக்கு இது கிடைப்பது கடினமாக உள்ளது.
எனவே, நான் இதற்கு ஒரு தீர்வை பரிந்துரை செய்தேன். அதில், ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் தொடர்ச்சியாக படித்து பட்டம் பெற்றிருந்தால் அவர்களை இட ஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, அவர்களது இட ஒதுக்கீட்டை அதே சாதியை சார்ந்த மற்றவர்களுக்கு கொடுத்துவிடலாம் என்றேன். ஆனால், ஆணையத்தில் என் கூட இருந்தவர்களே இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் ஆணையத்தில் இருந்த பலரும் அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறியவர்கள்.
நிச்சயமாக ஒரு நாள் வரும் அன்று நாம் சமூக பின்தங்கிய (Social Backwardness) நிலையில் இருந்து பொருளாதார பின்தங்கிய (Economic Backwardness) நிலைக்கு மாறுவோம், இதை எம்.ஜி.ஆர் ஒரு முறை அறிமுகப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், அச்சமயம் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அன்றைய சூழலில் இதனை மக்களும், அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இது ஒரு மெதுவான செயல்முறை தான் ஆனால் கண்டிப்பாக இந்த நிலையை அடைந்தாக வேண்டும். இதுவே சாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.
இந்த பொருளாதார பின்தங்கிய நிலைக்கான மாற்றம் என்பது நிச்சயம் சாத்தியமான ஒன்று தான். இதற்காக குடும்பங்களின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையும் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தில் செழிப்படைய வேண்டும், குடும்ப வருமானம் உயர வேண்டும். அரசாங்கம் இலவசங்களை கொடுத்தாலும் அது எங்களுக்கு வேண்டாம் என்று கூறும் அளவிற்கு ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் வளர வேண்டும். நாம் ஒரு மாநிலமாக, நாடாக முன்னேற்றம் அடைய வேண்டும், முதிர்ந்த ஜனநாயகமாக ஆக வேண்டும். ஆயிரம் கொடுக்கிறேன், இரண்டாயிரம் கொடுக்கிறேன் என்பது இதற்கு தீர்வாக முடியாது என்றார்.
இது போன்று வேட்பாளர்கள் சாதி ரீதியாக நிறுத்தப்பட்டாலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள், முந்தைய அரசின் செயல்பாடுகள், மக்கள் செல்வாக்கு, அவர்களது மனநிலை உள்ளிட்டவையும் வேட்பாளர்களை தேர்வு செய்து மக்கள் வாக்களிப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.