வேலூர்: வேலூர் மாவட்ட திமுக சார்பில் 'திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம்' இன்று(ஜூன் 15) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தடையாக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தடையாக இருப்பது தமிழ்நாடு அல்ல. கர்நாடக அரசு தான். முதலில் ஒப்பந்தம் முடிந்துவிட்டது எனக் கூறி தடை போட்டது கர்நாடக அரசு. பின்னர் தீர்ப்பாயம் வேண்டும் என்று கேட்டபோது, அதைத் தடுக்க வந்ததும் கர்நாடக அரசு. தீர்ப்பாயம் வந்த பிறகு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததும் கர்நாடக அரசு.
தேர்தலுக்காக ஸ்டன்ட் அடிப்பது யார்?: தீர்ப்பாயம் வந்த பிறகு அரசாணை போட்ட பிறகும் மூன்று ஆண்டுகள் காவிரி நீர் மேலாண்மை குழுவுக்கு தலைவரை நியமிக்க விடாமல் தடுத்ததும் கர்நாடக அரசு. காவிரி வரலாற்றில் ஒவ்வொரு அங்குலமாக எதிர்த்தது, கர்நாடக அரசு. அவர்கள் தமிழ்நாட்டை குற்றம் சொல்வது பெருமை அல்ல. கர்நாடக முதலமைச்சரின் கருத்து சரியல்ல. காவிரி வரலாறு குறித்து கர்நாடக முதலமைச்சருக்கு தெரியவில்லை' என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், 'முதலமைச்சர் எழுதிய கடிதத்தை ஒன்றிய அரசு ஏற்காது என்கிறார். மத்தியிலும் பாஜக, கர்நாடகாவிலும் பாஜக. நாங்கள் சொல்வதைத் தான் ஒன்றிய அரசு கேட்கும் என மறைமுகமாக கர்நாடக முதலமைச்சர் கூறுகிறார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தியுள்ளன. அதில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை என கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளார். 9 கூட்டங்களில் தமிழ்நாடு அரசு கலந்துகொண்டுள்ளது. சில கூட்டங்களை அவர்களே ரத்து செய்துள்ளார்கள். நாங்கள் கலந்து கொள்ளவில்லை என சொல்வது பொய். கர்நாடக முதலமைச்சர் தவறான செய்தியைத் தருகிறார். நான் இதற்கு வருத்தப்படுகிறேன்.
ஆளுநர் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது: ஒரு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது சட்டவிரோதமா? மேகதாது அணை கட்டக்கூடாது என சொல்வது சட்ட விரோதமா? இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கர்நாடக முதலமைச்சருக்கு தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தை ஸ்டன்ட் என்று சொல்கிறார். அவர் தான் தேர்தலுக்காக ஸ்டன்ட் அடிக்கிறார் என்று சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.
எங்கள் தலைவரை டச் பண்ணிட்டார் என்றால், இது திமுக... ஜல்லிக்கட்டு மாடு சும்மா விடாது" என்று பேசினார்.
தொடர்ந்து சனாதன விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’மண்ணின் பெருமை தெரியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். சனாதனத்திற்கு இந்த மண்ணில் இடமில்லை. அதை ஒழித்துவிட்டோம். அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. ஆளுநர் அல்ல. எந்த கொம்பனாலும் முடியாது’ எனக் காட்டமான பதிலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினின் நடவடிக்கையை கொச்சைப்படுத்துவதா?'..கர்நாடக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம்