வேலூர்: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூரில் இன்று (செப். 17) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்தார். வேலூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த தினத்தையொட்டி வேலூர் அண்ணா சாலையில், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டு இருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டி முதலமைச்சர் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தீண்டாமைக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், ஆர்.காந்தி, மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: PM Modi : பிரதமர் மோடி பிறந்த நாள் விழா.. நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!
குடியிருப்பு: அதனை தொடர்ந்து, வேலூர் அருகே மேல்மொணவூரில், தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 79 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591 குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
வேலூர், மேல்மொணவூரில் மட்டும் 11 கோடி ரூபாயில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு புதிய வீட்டிற்கான சாவியை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பயனாளிகளிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தமிழக அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லங்களை கட்டி வழங்கி உள்ளது. அதனை பராமரித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான், காந்தி ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்ட எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தமிழர் பெருமை பறைசாற்றும் காளையர்கோவில்!