திருப்பத்தூரில் அண்ணாமலை வணிக வளாகத்தில் ரவி (54) என்பவர் உணவகம் நடத்திவருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்ற ஆட்டோ ஓட்டுநர் (33) ரவியின் உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்டபின் பிரதாப்பிடம் உணவக உரிமையாளர் ரவி பணம் கேட்டுள்ளார். இதற்கு பிரதாப் ”நான் ஏற்கனவே பணத்தைக் கொடுத்துவிட்டேன்” என்று பொய் சொன்னதாகத் தெரிகிறது.
இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதாப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உணவக உரிமையாளர் ரவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரவியின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் ரவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநர் பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியும் ஓர் உணவு விடுதியா... உலகையே வியப்பில் ஆழ்த்திய தொழில்நுட்பத்தின் பிரமாண்டம்!