வேலூர்: தோட்டப்பாளையம் காட்பாடி சாலையில் ஐந்து தளங்களுடன் கூடிய பிரபல தங்க நகைக் கடை இயங்கி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி கடையின் தரைதள பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு சுமார் ரூ.8 கோடி மதிப்புடைய 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இச்சம்பவம் தொடர்பாக 2021ம் ஆண்டு வேலூர் மாவட்ட காவல் துறையினர் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் , இந்த நகைக் கொள்ளையில் ஈடுபட்ட வேலூர் பள்ளிகொண்டா அருகே உள்ள குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கான டீக்காராமன்(24) என்பவரை தனிப்படை போலீசார் ஐந்து நாட்களில் கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருடன் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் (எண் 4) இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷ்கலா, கைது செய்யப்பட்ட டீக்காராமன் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் செலுத்தப்பட வேண்டும் எனவும் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: 2023-2024 நெல் கொள்முதல்; நெல் குவிண்டாலுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு
தண்டனை பெற்ற டீக்காராமன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நகைக்கடையில் திருடுவதற்காக 10 நாட்கள் திட்டமிட்டு சுவரில் துளையிட்டும், நகைக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களில் ஸ்பிரே அடித்தும் , சிங்க முகமுடி மற்றும் தலையில் விக் அணிந்து நகைகளைத் திருடி சென்ற காட்சிகள் அப்போது வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிபோதையில் தாய்மாமன் மகன் கொலை - பொள்ளாச்சியில் அதிர்ச்சி!