வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்திரபள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிலட்சுமி. இவர்களுக்கு கபில்(3) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கால், தலையில் பிரச்னை இருந்ததால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தைக்கு தலையில் நீர் கோர்த்து உள்ளதாகவும் அந்த நீரை அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தையைக் கடந்த 19ஆம் தேதி புகழ்பெற்ற சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பழனியால் சிகிச்சைக்கு தேவையான பணத்தை உடனடியாக செலுத்த முடியவில்லை. இதனால் கபிலுக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர்கள் பணத்தை தயார் செய்து கட்டியதும் சிகிச்சை தொடரப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இன்று உயிரிழந்தான்.
பணத்தை காரணம் காட்டி மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், குழந்தையின் உறவினர்கள் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.