வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் வசித்துவருபவர் வேலாயுதம் (40). இவரது மனைவி பிரேமா(38). இவருக்கும் மகாலெட்சுமி (17) என்ற மகளும், மனோகரன் (20) என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில், கோடை காலம் என்பதால் அவர்கள் நேற்று (ஏப்.14) வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளனர்.
நள்ளிரவில் வீட்டின் வெளியே நாய்கள் குரைத்ததால் என்னவென்று பார்பதற்காக பிரேமா வெளியில் சென்றுள்ளார். அப்போது, சிறுத்தை ஒன்று அவரைத் தாக்கிவிட்டு வீட்டின் உள்ளே புக முயற்சித்துள்ளது. இதனைக் கண்ட கணவர் வேலாயுதம், மகன் மனோகர், மகள் மகாலட்சுமி ஆகியோர் வீட்டிலிருந்து வெளியே சென்றனர். இருந்தபோதிலும், மனோகர், மகாலட்சுமி ஆகியோரை சிறுத்தை லேசாக தாக்கியுள்ளது. இதனையடுத்து சிறுத்தையை வீட்டின் உள்ளே வைத்து அவர்கள் கதவை பூட்டிவிட்டனர்.
இவர்களின் அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் வனத்துறையினர், இரவு நேரம் என்பதால் சிறுத்தையைப் பிடிக்காமல் கண்காணித்து வந்தனர். மேலும், மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நிபுணர்கள் வண்ணலூரிலிருந்து வருகை புரிந்தனர்.
குழந்தைகள் விளையாடும் பேட்டரி ரிமோட் காரை வீட்டினுள் அனுப்பி, அதன் மூலம் சிறுத்தையை விரட்டி மயக்க ஊசி செலுத்திய வனத்துறை அலுவலர்கள் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையைப் பிடித்தனர். பின்னர், மயக்கத்திலிருந்த சிறுத்தையை கூண்டில் அடைத்து, பாதுகாக்கப்பட்ட தமிழ்நாடு - ஆந்திரா வணப்பகுதியான சாரங்கல்லில் விட்டனர்.
பள்ளாதுப்பம், குண்டலபள்ளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு இடையே கலர்பாளையம் கிராமம் அமைந்திருப்பதாலும், நேற்றிரவு பெய்த மழையின் காரணமாகவும் சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இப்பகுதியில் சிறுத்தை வந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 சிறுத்தைக் குட்டிகள் உயிரிழப்பு - வனத் துறை தீவிர விசாரணை!