வேலூர்: கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு வழிநெடுகிலும் அம்மனுக்கு ஆடுகள் பலியிட்டும், சிலம்பாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக சிரசு திருவிழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 15ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று வெகு விமர்ச்சையாக கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கெங்கையம்மன் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்ற ஏராளமான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டனர். இதனைத் தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு வழி நெடுகிலும் சிலம்பாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுபுற கலை நிகழ்சிகளுடன் அம்மன் சிரசு ஆலயம் கொண்டு வரப்பட்டது. கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கெங்கையம்மன் சிரசு விழாவின் புராணக்கதை: தாயின் பாசத்தால் மூன்று மகன்களும் தந்தை சொல் மறுக்க, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கோடாரியுடன் புறப்பட்டான் பரசுராமன். பெற்ற மகனே தன்னைக் கொல்ல வருகிறான் என்பதை தெரிந்த தாய் கலக்கத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள ஓடினார். நீண்ட தூரம் ஓடிய களைப்பால் இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். பெற்ற தாய் என்று நினைக்காமல் வெட்ட வந்த, பரசுராமனைத் தடுத்தார் வெட்டியானின் மனைவி.
தந்தையின் கட்டளையைத் தடுக்க நினைத்த வெட்டியான் மனைவியின் தலையை வெட்டிய பரசுராமன், பின்னர் தாயின் தலையையும் வெட்டிச் சாய்த்தான். கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான்.
மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக்கதையின் அடிப்படையில், கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கெங்கையம்மன் சிரசு விழாவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சேலத்தில் பஞ்சலோக சிலைகளை திருடிய போலி சாமியார் கைது!