வேலூர்: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (டிச.02) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று (டிச.03) வடமேற்கு திசையில் நகர்ந்து மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் நாளை (டிச.04) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், இவ்வாறு வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த மிக்ஜாம் புயல் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 4ஆம் தேதி) கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு தரப்பிலிருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மழை நீர்த் தேக்கங்கள் உள்ள இடங்களில் உடனடியாக நீரை அப்புறப்படுத்துதல், மின் தடை பிரச்சனைகளைச் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பொது மக்கள் பாதிப்பு குறித்துத் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வகையில் இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதைத் தொடர்ந்து, புயல் எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் நாளை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாளை வேலூரில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பினை தொடர்ந்து, தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகம் சார்பில் நாளை நடைபெற இருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்விற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பொது விடுமுறை - அரசு அறிவிப்பு!