வேலூர் வசந்தபுரம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகாலமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்களைக் காலி செய்யும்படி ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த திருமாவளவன் சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்காக குரல் கொடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’இப்பகுதியில் இருந்து தான் மக்கள் தினசரி கூலி வேலைக்காகவும், மாணவர்கள் கல்வி பயில்வதற்காகவும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச்சென்று வருகின்றனர்.
அவர்களுக்கு மாற்று இடம் வழங்கினாலும்கூட தற்போதுள்ள நிலைக்கு அவர்களால் வேறு இடங்களுக்குச்செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ரயில்வே துறையினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வேலூர் நகரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை இதயப்பிரிவு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியுள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பிரிவை ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் புதிதாக தொடங்கலாமே தவிர, இங்கிருந்து அதனை அப்புறப்படுத்தக்கூடாது.
அப்படி அப்புறப்படுத்தினால் வேலூர் நகர சுற்றுலா, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனை சிஎம்சி நிர்வாகம் அறிய வேண்டும். இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சிஎம்சி நிர்வாகத்திடம் முறையிட உள்ளோம்.
ஏழைகளுக்கு இலவச கல்வி: 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச்சட்டத்தின்படி தவிர்க்கக் கூடியதாகும். சமூக நீதியை நீர்த்துப்போகிற செய்தி. ஏழைகளுக்கு உதவுவதை யாரும் எதிர்க்கவில்லை. முன்னேறிய சமூகமாக இருந்தாலும் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் ஏழைகளுக்கு இலவசமான கல்வி வழங்கலாம். கடன் உதவிகளை வழங்கலாம்.
கல்விக்கான உதவித்தொகை வழங்கலாம். தொழில் தொடங்க கடன் உதவிகளை வழங்கலாம். இப்படி பல நலத்திட்டங்களை அரசு செய்யலாமே தவிர, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது என்பது அரசியல் அமைப்புச்சட்டம் உறுதிப்படுத்தி இருக்கிற சமூக நீதிக் கோட்பாடு. சிதைக்கப்படும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுவாக இட ஒதுக்கீடு பிரச்னையாக மட்டும் பார்க்காமல் இதன் பின்னணியில் உள்ள கோட்பாட்டை அரசியலையும் பார்க்க வேண்டும். விளிம்புநிலையில் இருக்கிற மக்களுக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு விழுக்காடு சமூக நீதி கோட்பாட்டோடு தொடர்புடையது.
சமூக நீதி என்பது ஏழை, பணக்காரன் என்ற அடிப்படையில் உருவானது அல்ல, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்ற அடிப்படையில் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சூத்திரர்களையும் அவர்கள் சார்ந்து வாழ்கின்ற மக்களையும், பழங்குடியினரையும் இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது.
இட ஒதுக்கீடு: பணக்காரராக இருந்தாலும்கூட அவர்கள் கீழ் சாதியைச்சார்ந்தவர்கள், சூத்திரர்கள் என்கிற உளவியல் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளிலும் 80 விழுக்காட்டிற்கு மேல் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்ந்த சாதியினர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கூறுவது அப்பட்டமான பொய். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
எனவே தான், பொருளாதார அளவுகோலா சமூக நீதி அளவுகோலா என்பதையே நாம் பார்க்க வேண்டும். ஏழையா, பணக்காரனா என்பதைப் பார்க்கக்கூடாது. எனவே, சங்பரிவார் நோக்கம் என்பது சமூக நீதியைத் தகர்ப்பது என்பதுதான். ஆகவேதான், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்நோக்கத்தை விமர்சிக்கிறோம்’ என்றார்.
பாஜக அசுரவேகத்தில் வளர்ந்து வருவதாக துரைமுருகன் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’துரைமுருகன் நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார். அவர் நகைச்சுவை பேச்சாளர். ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடைவெளி ஏற்படுத்தப்படாமல் இருப்பதற்காக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பாலம் போன்றவர். மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள், அதை உணராமல் தமிழ்நாடு ஆளுநர் செயல்படுகிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடியைத் தருகிறார்கள்.
ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி விடுதலை செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மேற்கொண்டு சீர் ஆய்வு மனு செய்தாலும் மீண்டும் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தைத் தான் தெரிவிக்கும்.
உச்ச நீதிமன்றம் மகிழ்ச்சியாக அவர்களை விடுதலை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் விடுதலை செய்தது அரசின் முடிவல்ல. சட்டத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய நிலைப்பாடு’ என்றார்.
மேலும், பாஜகவினைப் பார்த்து தமிழ்நாடு அரசு பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த திருமாவளவன், “அதிமுகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருந்தால் அது வரவேற்கத்தக்கது. இதனைப் பார்க்கும்போது அவர் பாஜகவின் ஆளாகத்தான் பேசுகிறார். அதிமுகவை கைவிட்டுவிட்டார் என்று தான் தோன்றுகிறது” என்றார்.
இதையும் படிங்க: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!