வேலூர் நாராயணபுரம் பகுதியில் குப்பன் என்பவர், இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சடலத்தை ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லும்போது ஆற்றங்கரையோரத்தின் இருபுறமும் உள்ள நில உரிமையாளர்கள் வழி கொடுக்க மறுத்ததால், சடலத்தை பாலத்திலிருந்து கயிறுகட்டி இறக்கி கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை செய்தனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர், வாணியம்பாடி வட்டாட்சியர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகிய மூவரும் நேரில் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், 'வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் இயற்கையான மரணம் ஏற்பட்டால் ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் சடலத்தை அடக்கம் செய்து வந்தனர். அதே சமயம், இயற்கைக்கு மாறாக விபத்தில் உயிரிழந்தால் அதை ஆற்றங்கரையோரம் எரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
நாராயணபுரத்தில் நில உரிமையாளர்கள் மறுத்ததால், மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலத்தை இறக்கி இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர். ஆற்றங்கரையில் நிலம் வைத்திருக்கும் சக்ரவர்த்தி, யுவராஜ் ஆகியோருக்கு இருப்பது பட்டா நிலம் தான். ஆக்கிரமைப்பு கிடையாது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலம் கையகப்படுத்தி உரிய முறையில் சடலத்தைக் கொண்டு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, வேலூர் மாவட்டத்தில் சுடுகாடு பிரச்னை இருக்கிறதா என்று ஆய்வு செய்து நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.