திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை மாநிலத் தலைவர் டாக்டர் அஸ்லாம் பாஷா தலைமையேற்றார்.
மத்திய அரசு அலுவலகமான எல்.ஐ.சி. அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, ‘அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 14இன் படி இந்தியாவில் வாழும் அனைவரும் இந்திய குடியுரிமை பெறுவதற்குத் தகுதியானவர்கள்தான். எனவே, குடியுரிமை திருத்தச்சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஒரு சட்டம்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள காரணத்தால் தான் இந்தியா முழுவதும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வருகிற போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.
இந்த போராட்டத்தை பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரும் கையில் எடுத்துப் போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தச் சட்டத்திற்கு எதிராக 108 அறிஞர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான பிரச்னை இல்லை. இது அரசியல் சட்டத்திற்கு எதிரான பிரச்னை’ என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி - அழைப்பு விடுத்த திமுக!