வேலூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காட்பாடி போலீஸ் நிலையத்தில் நேற்று (ஜூலை 12) திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
காட்பாடி போலீஸ் நிலையத்தில் இதுவரை பதிய பெற்று உள்ள குற்ற வழக்குகள் எத்தனை, அதில் எத்தனை வழக்குகளில் தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து எத்தனை செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன, எவ்வளவு கொலை வழக்குகள் மற்றும் அவற்றில் தீர்வு கண்டறியப்பட்டவை எத்தனை என ஒவ்வொன்றையும் கேட்டறிந்தார்.
குற்றங்களை குறைப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வுக்கு பின் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
போக்குவரத்து நெரிசல்: வேலூர் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. எதனால் ஏற்படுகிறது, எந்த நேரத்தில் ஏற்படுகிறது என ஆய்வு செய்து வருகிறோம். நெரிசல் மிகுந்த இடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.
இதையும் படிங்க: ஆக.17-இல் ரத்த கையெழுத்து இயக்கம் - தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம்
கஞ்சா பறிமுதல்: கஞ்சா கடத்தி வருபவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கஞ்சா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.மேலும், ஊடகம் என ஸ்டிக்கர் ஒட்டி வருபவர்களின் வாகனங்கள் தணிக்கை செய்யப்படும் எனவும் போலி நிருபர்கள் என கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
காட்பாடி போலீஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நடத்திய திடீர் ஆய்வின் போது காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், போலீசார் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினரால் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 11ம் தேதி சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் நேற்று (ஜூலை 12) கோவை மாவட்டத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை வெளி மாநில தொழிலாளர்களுக்கு சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்று வந்தது தெரியவந்தது.
இதைபோல கஞ்சா விற்பனை அதிகமாக காணப்படுவதால் கஞ்சா விற்று வரும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய படுவார்கள் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவையில் சில்லறை மற்றும் மொத்தமாக விற்பனையாகும் கஞ்சா.. வெளிமாநில தொழிலாளர்களே குறி!