வேலூர்: வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை காட்பாடி ஒன்றியம் சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆக 25) தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "தமிழக முதல்வரின் உத்தரவு அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தர்மத்திலேயே தலை சிறந்த தர்மம் பசித்த வயிற்றுக்கு உணவளிப்பது. அதனாலேயே முன்னாள் முதல்வர்களான காமராஜரும், எம்ஜிஆரும் பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டம் மூலம் மாணவர்களுக்கு உணவு வழங்கினர். அதேபோல், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், வறுமையாலும் அல்லது பெற்றோர்களின் பணிச்சுமை காரணமாக காலை வேளையில் பள்ளிகளுக்கு பசியோடு வரும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்" என்று கூறினார்.
அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்தது போல, கடந்த ஆண்டு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் உணவு சரியாக இருந்தால் தான் உடல்நிலை நன்றாக இருக்கும் என்றும், உடல்நிலை நன்றாக இருந்தால்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும் என்று கூறினார். மேலும், அந்தவகையில், காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்பதில் ஐயமில்லை என்று கூறினார்.
முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 48 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 3,249 மாணவ, மாணவிகளுக்கும், 2ஆவது கட்டமாக மேலும் 34 அரசுப்பள்ளிகளில் பயிலும் 3,701 மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்த திட்டம் வெள்ளிக்கிழமை முதல் (இன்று முதல்) அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில், மேலும் 576 பள்ளிகளில் பயிலும் 32,304 மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கே.வி.குப்பம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியிலும் அமைச்சர் துரைமுருகன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.