ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பிலாஞ்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் அசோகனின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார். இந்தத் திருமண நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அதிமுக மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன. ஏனைய அனைத்துக் கட்சிகளும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் இந்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன. திமுக CAA-வுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் மசோதா தாக்கலின்போது எதிர்த்து வாக்கும் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையின்போது டெல்லியில் நடைபெற்ற கலவரம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் பின்விளைவு. அதிமுக ஆட்சியில் அதிக ஊழல் நடக்கிறது. ஊழலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நம்பர் 1ஆக உள்ளார். இவர் முதலமைச்சர் எடப்பாடியையே ஊழலில் தோற்கடித்துவிட்டார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக கூறியது ஓ.பி.எஸ் தான். 40 நிமிடங்கள் ஜெயலலிதாவின் சமாதியில் ஆவியோடு பேசினார் ஓ.பி.எஸ். ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து 3 மாதங்களில் அறிக்கை கேட்ட நிலையில், 3 ஆண்டுகளாகியும் அங்கு நேரில் ஆஜராகாமல் காலத்தை மட்டுமே நீட்டித்து கொண்டிருக்கிறார். ஒருவேளை மர்மம் கண்டறியப்பட்டால் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் சிறைக்குச் செல்வது உறுதி’ என்றார்.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்?