வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அணைகட்டு தொகுதி ஊசூர் பகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்காண்டார். அப்போது பேசிய அவர், ”வேலூர் தேர்தலில் உறுதியாக கதிர் ஆனந்த் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்ல நிச்சயம் வருவேன். தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு உதவாக்கரை, எதற்குமே பயன்படாதவர்.
இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 1,600 கோடி ரூபாய் ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. குடிநீர் திட்டத்துக்கு 2,064 கோடி ஒதுக்கி திருப்பி அனுப்பப்பட்டது. இதைபார்த்தால் முதலமைச்சரை உதவாக்கரை என சொல்லாமல் வேறு என்ன சொல்வது. நான் ஒரு விவசாயி என பெருமை பேசும் முதலமைச்சர் ஒரு விஷவாயு.
ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா முதலமைச்சராக ஆசைப்பட்டார். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அவர் சிறை செல்ல வேண்டியிருந்தது. அப்போது யாரை முதல்வராக்குவது என்று யோசித்தபோது முதல் அடிமையான எடப்பாடியை அவர் முதலமைச்சராக்கினார்” என்றார்.