வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், இதர தொழில் செய்யவும் வேலூர் வந்திருந்த பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கால் கடந்த 40 நாள்களாக அவதிப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நிதியில் கடந்த புதன்கிழமை (மே.06) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 140 பேர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக நேற்று (மே.08) இரவு 8.00 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 131 பேர் சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில், ”வேலூரைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தில் இருந்தால் இ-பாஸ் மூலம் பதிவு செய்யவேண்டும்.
வேலூரிலிருந்து கோயம்பேடு போகும் கீரைகளை தடுத்து நிறுத்திவுள்ளோம். அவற்றை இங்கேயே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கோயம்பேடு மார்க்கெடுடன் தொடர்புடைய இரண்டு பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:வேலூர் மாவட்டத்தை சுற்றும் கரோனா ஆட்டோ!