வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த காரை மேட்டுத்தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சிவா, மீனா ஆகியோர் சென்னை சென்றுவிட்டு கடந்த 15ஆம் தேதி காலை ஊருக்கு வந்திருக்கின்றனர். முத்துகடையிலிருந்து காரை செல்வதற்காக அருகிலிருந்த தினகரன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது மீனா அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலி தவறி ஆட்டோவில் விழுந்துள்ளது.
இதை கவனிக்காத தம்பதியினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதற்கிடையில் ஆட்டோவை துடைக்கும்போது தங்க நகை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் தினகரன் உடனடியாக அந்த நகையை ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
வறுமையான சூழலில் ஆட்டோ ஓட்டிவரும் தினகரன் தனது வண்டியில் கிடந்த தங்க நகையை சுயநலம் பாராது காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவரை கௌரவப்படுத்தும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார், அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
.