வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி, பொன்னை கிராமத்தில் வசித்துவருபவர் ரேணுகோபால் (82). இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். 2013ஆம் ஆண்டு, ரேணுகோபால், தனது மூன்று மகன்களுக்கும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் அனைத்து சொத்துகளையும் எழுதி கொடுத்துள்ளார்.
தந்தையிடமிருந்து சொத்துகளைப் பெற்றவுடன், மகன்கள் அவருக்குச் சாப்பிட உணவு கொடுக்காமலும், எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமலும் மிகவும் துன்புறுத்திவந்துள்ளனர். இதனால், மகன்களுக்கு தான் எழுதிக்கொடுத்த சொத்துகளை மீண்டும் தன் பெயரில் எழுதிக் கொடுக்குமாறு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷிடம் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், பெற்றோர் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டத்தின் கீழ், ரேணுகோபால் தன் மூன்று மகன்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்த அனைத்து சொத்துகளையும் ரத்துசெய்து, சொத்துகளை மீண்டும் ரேணுகோபாலின் பெயருக்கே மாற்றி வைத்து உத்தரவிட்டார்.
இதற்கான ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (நவ. 19) கோட்டாட்சியர் கணேஷ் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர், "ரேணுகோபால் 2013ஆம் ஆண்டில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பாக மூன்று முறை விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் அவர் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்ததை அடுத்து சொத்துகளை மீட்டு அவருக்கே கொடுத்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து, "அவரது மகன்கள் இதே போன்று மீண்டும் நடந்துகொண்டால், காவல் துறையினர் உதவியுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தவர், இது போன்ற புகார்கள் குறித்து, விடுமுறை நாள்கள் தவிர ஏனைய நாள்களில், காலை 10 முதல் மாலை 6 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்றார்.
இந்த நடவடிக்கை குறித்து ரேணுகோபால் கூறுகையில், "மளிகை வியாபாரம் செய்து சம்பாதித்த சொத்து இது. என் மனைவி இறந்துவிட்டார். என் மகன்களும் என்னை கைவிட்டுவிட்டனர்.
இந்நிலையில்தான் என்னுடைய சொத்துகளை என் பெயருக்கு மீட்டு கொடுக்கும்படி ஆர்டிஒவிடம் மனு அளித்தேன். விசாரணை மேற்கொண்டு என்னுடைய சொத்தை மீட்டு கொடுத்த ஆர்டிஒவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: உணவில் கண்ணாடி துகள்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; உணவு பாதுகப்பு துறையினர் சோதனை