வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான காவல் துறையினர், அணைக்கட்டு அடுத்த குருமலை மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சாராயம் காய்ச்ச இருந்த இடங்கள் கண்டறியப்பட்டது. மேலும் அங்கு இருந்த 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் அதன் மூலப் பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 600 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை காவல் துறையினர் அழித்தனர். மேலும் இந்த ஊறல்களை யார் பதுக்கி வைத்தது என்பது குறித்தும், கள்ளச்சாராயம் வேறு ஏதேனும் இடங்களில் காய்ச்சப்படுகிறதா மற்றும் இதன் விற்பனை எவ்வாறு நடைபெறுகிறது என்பது தொடர்பாக வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 2 அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் இருக்கும் தின்பண்ட கடைகளில், விதிமுறைகளுக்கு மீறி 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலூர் பேருந்து நிலையத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை!