வேலூர்: ஆந்திராவிலிருந்து காட்பாடி வழியாக ரயிலில் கஞ்சா, ரேஷன் அரிசி, வெள்ளி போன்ற பொருட்கள் கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க ரயில்வே குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் சோதனை
இந்நிலையில் நேற்று(ஆக 19) இரவு ரயில்வே குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறையினர் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த விசாகப்பட்டினம் - கொல்லம் விரைவு ரயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த ரயிலில் பயணிகள் இருக்கையின் கீழே கேட்பாரற்ற கிடந்த 2 பெரிய பைகளை சோதனை செய்ததில், 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள், பார்சல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை காவல் துறையினர் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
வேலூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை
இது தொடர்பாக வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அவர்களிடம் தனிப்படை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வேலூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.