வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேலூர் மாங்கா மண்டியில் இருந்து சாய்நாதபுரம் வரை பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"அதிமுக முத்தலாக் விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்த்து வாக்குச்செலுத்தாமல் வெளிநடப்பு செய்தது. அவ்வாறு செய்யாமல் மசோதாவிற்கு எதிராக வாக்கு செலுத்தியிருந்தால் மசோதா நிறைவேறவிடமால் தடுத்திருக்கலாம், ஆனால் அதை செய்யாமல் மறைமுகமாக அம்மசோதா நிறைவேறுவதற்கு உதவியாய் இருந்துள்ளது. இதேபோல் என்ஐஏ விவகாரத்தில் திமுக அந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் வாக்கு செலுத்திவிட்டு தற்போது அரசியலில் பழிவாங்குவதற்காக அச்சட்டம் பயன்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.இது இவர்களுக்கு புதிதல்ல
வேலூரில் இஸ்லாமியர்கள் வாக்குகள் 3 லட்சம் இருக்கிறது. அந்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் பதறுகிறது. அதனால் இரட்டை வேடம் போடுகிறது. தற்போது தேர்தல் களத்தில் இரண்டு பெரும் கட்சிகளும் ரூ.250 கோடி, ரூ.350 கோடி என முதலீடு செய்து வாக்குகளை பெற நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் உயர்ந்த லட்சியத்தை மக்கள் மத்தியில் சொல்லி ஓட்டு கேட்கிறோம். தற்போதைய காலகட்டத்தில் நாங்கள் முன்வைக்கின்ற அரசியல்தான் வெற்றிபெற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே மக்கள் எங்களுக்கு அதிக ஆதரவு கொடுப்பார்கள்"என்றார்.