வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேஷ்புரத்தைச் சேர்ந்தவர் பிரேம்ராஜ் (32). இவர் வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் ஏழு ஆண்டுகளாக மருந்தாளுநராக வேலை செய்துவருகிறார். இவருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், இவரது மனைவி கார்த்திகா (26) இரண்டாம் முறையாக நான்கு மாத கர்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், இவரது மனைவி மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். தனது மனைவியை அழைத்து வருவதற்காக, பிரேம்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெங்கடாபுரம் ஏரியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் பிரேம்ராஜ், லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த காட்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதியவரைத் தாக்கிய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்!