வேலூர் மாவட்டம் திருப்பத்தூரையடுத்த கொடுமாம்பள்ளி புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் பத்து நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது சடலம் குறித்து ஆந்திர காவல் துறையினரிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கும்போது சண்முகத்தின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பத்தூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடலை உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் உயிரிழந்த சண்முகத்துடன் வேலைக்கு சென்ற நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.