வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில், அரக்கோணம் நாடாளுமன்ற அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஏ கே மூர்த்தியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது;
'ஒருத்தர் தலை நிமிர்ந்து செல்கிறார் என்றால் அவர் அதிமுக கூட்டணி, அதே ஒரு நபர் தலை குனிந்து சென்று இருக்கிறார் என்றால் அவர் திமுக கூட்டணியை சேர்ந்தவராகதான் இருப்பார். தமிழகத்தில் அதிக வாக்குகளை கொண்டவர்கள் பெண்கள். அவர்கள் நினைத்தால் எதையும் மாற்றும் வல்லவர்கள். அதிமுக கூட்டணி தெளிந்த நீரோடை, அவை எடுத்து எடுத்து குடிக்கலாம், ஆனால் திமுக கூட்டணி தேங்கி கிடக்கின்ற குட்டை தண்ணீர், நான் டாக்டராக இருந்தாலும் விவசாயம் செய்தவன்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லிருக்கின்ற அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாங்கள் அவர்களுக்கு (ஆளுங்கட்சி) அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டு இருப்போம். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக எங்கள் தேர்தல் அறிக்கையில் 60% சதவீதம் காப்பி அடித்தனர். தற்போது எங்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து 90% காப்பி அடித்து உள்ளனர் அதனை நான் அடித்து சொல்ல முடியும். நலிவுற்ற மக்களுக்கு மாதமாதம் 1,500 கொடுக்க சொல்லி இருக்கிறோம், விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து அனைத்தும் நாங்கள் நிறைவேற்ற போராடுவோம். திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்காக எத்தனை கோடிகள் வேணாலும் செலவழிப்பார்கள்' என்றார்.