முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில் வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று உட்பட உடல்நிலை பாதிப்பு இருந்ததால், அவர் அடிக்கடி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
இதன் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் பின்பு அங்கிருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர். இந்த நிலையில், தனது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவும்; தனது சகோதரி மகள் திருமணத்தில் கலந்து கொள்ளவும் பரோல் வழங்கும்படி பேரறிவாளன் தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.
![பரோலில் வெளிவந்த பேரறிவாளன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5038741_par1.jpg)
அவரது கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒருமாதம் பரோலை அரசு வழங்கியுள்ளது. ஏற்கெனவே இதே காரணத்துக்காக கடந்த 2017ஆம் ஆண்டு பேரறிவாளன் இரண்டு மாதம் பரோலில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை புழல் சிறையிலிருந்து பேரறிவாளனை நேரடியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இல்லத்திற்கு காவல் துறையினர் அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சென்னை காவல் துறையினர் இன்று காலை வேலூர் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.
பின்னர் இங்கிருந்து வேலூர் காவல் துறையினர் மூலம் பேரறிவாளன் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், பேரறிவாளன் வேலூர் சிறைக்கு ஏன் அழைத்துவரப்பட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, வேலூர் சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு :
'பேரறிவாளனுக்கு பரோல் காலத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்புப் போட வேண்டும். எனவே சென்னை புழல் சிறையிலிருந்து நேரடியாக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டால் சம்பந்தப்பட்ட சென்னை காவல் துறையினர் தான் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சுழற்சி முறையில் பாதுகாப்பு என்பதால், சென்னையிலிருந்து காவல் துறை பாதுகாப்பு அளிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும், பரோல் காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள பேரறிவாளனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 23, 24 ஆம் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை சாலையில் உள்ள தேவராசு திருமண மண்டபத்தில் பேரறிவாளன் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை, மணமகன் கௌதமன் தம்பதிக்கு திருமணம் நடைபெறுகிறது.
ஒரே தாய் மாமன் என்ற முறையில் பேரறிவாளனுக்கு திருமணத்தில் கலந்துகொள்ள சிறைத் துறை அனுமதியளித்துள்ளது. எனவே, கிருஷ்ணகிரி அழைத்துச் செல்வது உள்பட பல்வேறு விஷயங்களில் உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தால் தான் முறையாக இருக்கும் எனக்கருதினர்.
இதற்காக பேரறிவாளன் சென்னை புழல் சிறையிலிருந்து, வேலூர் மத்திய சிறைக்கு தற்காலிக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர், சென்னை காவல் துறை அவரை மத்திய வேலூர் மத்திய சிறையில் ஒப்படைத்துவிட்டு திரும்பிச் சென்றனர். பிறகு, சில இடமாற்றம் தொடர்பான ஆவண நடைமுறைகள் முடிவடைந்தப் பிறகு பேரறிவாளனை பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையிலிருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு வேலூர் மாவட்ட காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
![வீட்டின் அழைப்பு மணியை அடிக்கும் பேரறிவாளன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5038741_par2.jpg)
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் காவல் துணை ஆய்வாளர் தங்கவேல், காவல் ஆய்வாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் பேரறிவாளனை அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: