வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சத்துவாச்சாரி அருகே ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லோடு லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (மார்ச். 21) மதியம் சுமார் 12 மணி அளவில் லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், லாரியில் இருந்த ஒரு இருசக்கர வாகனம், மின் ஜெனரேட்டர், சமையல் பாத்திரங்கள், மிதி வண்டி, இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர், 20 கம்பு மூட்டைகளும் சேதமாயின. இதையறிந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த பரஸ்ராம் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும் சென்னையில் அவருக்கு தெரிந்த நபர்களிடமிருந்து வீட்டு உபயோக பொருள்களை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தானிற்கு டெலிவரி செய்வதற்காக எடுத்துச் சென்றார் என்பதும், சம்பவத்தன்று கண்ணமங்கலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்