வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பகுதியில் கொட்டி செல்லப்பட்ட மருத்துவக் கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனவும், இதனை வனத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி எனும் பகுதியானது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்லும் மலைப்பகுதியாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைப்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் குப்பைகளும், மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் வழிமுறை செய்துள்ள விதிகளை பின்பற்றாமல், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும், மருத்துவ நிர்வாகங்களும் குப்பைகளை சேகரித்து வந்து கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளையும், மருத்துவ ஊசி மற்றும் மருந்துகளையும் சாலை ஓரங்களிலும், பள்ளங்களிலும் மர்ம நபர்கள் கொட்டிச் செல்வதாக கூறியுள்ளனர். மேலும், இப்பகுதியில் கோழி இறைச்சிகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டி செல்வது தொடர்கதையாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு, மருத்துவக் கழிவுகளால் வனவிலங்குகளும், பொதுமக்களும் பாதிப்படைவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இம்மலைப்பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிவதாகவும், இந்த கழிவுகளால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பல்வேறு வைரஸ் நோய்களை உண்டாக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், குப்பைகளை கொட்டும் மர்ம நபர்களை கண்டறிய அரசு அதிகாரிகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடனடியாக முயற்சி எடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக எல்லையில் உள்ள வன சோதனைச் சாவடியில் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.