வேலூர்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய நாளை முன்னிட்டு, நேற்றைய முன்தினம் (நவ.26) விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் பிலிப் மற்றும் மாநகர பகுதி செயலாளர் இளையராஜா ஆகியோரின் தலைமையில், அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள விசிக கொடிக் கம்பம் புதுப்பித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, முன் அனுமதி பெறாமல் கொடி கம்பத்தைப் புதுப்பித்து நட்டு வைத்ததாகக் கூறி, காவல்துறையினர் இரவோடு இரவாக கொடி கம்பத்தை அகற்றி உள்ளதாகத் தெரிகிறது. இதனை அறிந்த விசிகவினர், நேற்று (நவ.27) காலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், இதில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் அண்ணா சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் ஆய்வாளர் பேபி, வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், கொடிக்கம்பத்தை ஒப்படைக்க வேண்டும் அல்லது மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறையினரிடம், “அனைத்து கட்சியின் கொடிக் கம்பங்களும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இருக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை மட்டும் அகற்றுவது ஏன் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் காலை முதல் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக இருசக்கர வாகனத்தில் குடிநீர் விநியோகமா? மதுரையில் நடந்தது என்ன?