ராணிப்பேட்டை மாவட்டம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தியாகராஜன்(26) என்பவருக்கும், வாலாஜா பாக்குபேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட காவியா என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. காவியாவுக்கு 6 வயது மகன் இருந்த நிலையில், தியாகராஜன் காவியாவை திருமணம் செய்து கொண்டார்.
6 வயது மகன் இருவருக்கும் இடைஞ்சலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு (13.06.2019) அன்று அச்சிறுவனை தண்ணீரில் முக்கி கொலை செய்து நாடகம் ஆடியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த தியாகு, திடீரென சிறை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிறையில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து சிறைத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.