திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் (29). இவர் கஜன்நாயக்கன்பட்டியில் காலணி கடை நடத்திவருகிறார். இவருடைய மனைவி பரிதா (27). இவர்களுக்கு மூன்று வயதில் முகமது என்ற ஆண் குழந்தை உள்ளது.
பரிதா இரண்டாவது முறையாக தாய்மையடைந்து இன்று காலை பிரசவத்திற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உறவினர்கள் பணியிலிருந்த செவிலியருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், செவிலியர், ‘மருத்துவர்கள் யாரும் இல்லை, போய் காத்திருங்கள் வந்து பார்க்கிறோம்’ என்று அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
பிரசவ வலி அதிகதித்து குழந்தையின் தலைப்பகுதி வெளியே வரத்தொடங்கியது, மீண்டும் செவிலியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, பரிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதிக ரத்தப் போக்கின் காரணமாக பரிதா உயிரிழந்தார். தற்போது குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உயிரிழந்த பரிதாவின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் சமாதானமாகாத உறவினர்கள், மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிடில் போராட்டம் நீடிக்கும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெஞ்சில் பாய்ந்த பந்து - சிறுவன் உயிரிழந்த பரிதாபம்