வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்கள் வரி பணத்தில் நடத்தப்படும் அரசு விழா மேடையில் அரசியல் பேசி, கூட்டணியையும் உருவாக்கி, திமுகவை ஏக வசனத்தில் வசைபாடிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். இது ஜனநாயகத்தின் நெறிமுறைகளை அழிக்கக்கூடிய செயல்.
2ஜி குறித்து பேசுவதற்கு முன் அமித்ஷா செய்தித் தாள் படிக்க வேண்டும். அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை உள்துறை அமைச்சர் அறிவாரா?. சமீபத்தில், பாரத் நெட்(Bharat Net) திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. அதற்கு டெண்டர் விடுவதில் மிகப்பெரிய கோளாறு இருந்ததால், மத்திய அரசுக்கு அடிபணியாத சந்தோஷ் என்ற ஐஎஎஸ் அலுவலர் ராஜினாமா செய்து கொண்டார். இது நடந்ததும் அத்திட்டத்தையே மத்திய அரசு நீக்கிவிட்டது.
திமுகவை மிரட்டும் தொனியில் அமித்ஷா பேசியுள்ளார். காவேரி-குண்டாரு, தாமிரபரணி-கருமேரி, தென்பெண்ணை- செய்யாரு, இணைப்புக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட் ஒதுக்கியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் என அமித்ஷா கூறுகிறார். பிகார் அல்ல தமிழ்நாடு, இது பெரியாரால் சுய மரியாதை பெற்ற மண், அண்ணாவால் அரசியல் பாடம் கற்ற மண், கருணாநிதியால் தமிழ் உணர்வையும், தன்மானத்தையும் பெற்ற மண் என்றார்.
80 வயதான மூத்த குடிமக்கள் தபால் வாக்கு தெலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்க உள்ளது" என்றார்.