கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு நேற்று பரிந்துரை செய்தது.
இதுதொடர்பான அரசாணையையும் நேற்று அரசு பிறப்பித்தது இருப்பினும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மூடி மறைப்பதாக மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்கள் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி விவகாரத்தில் நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும், நீதி வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் பெண்களை பாதுகாக்க முடியாத அரசு என்று தமிழக அரசின் மீது மாணவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.