திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (22). தாய், தந்தையை இழந்த இவர் தனது சித்தப்பா செல்வம், சித்தி சித்ரா வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில், ரேவதிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவருடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.
பின்னர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ரேவதியின் சித்தப்பா செல்வம் மீண்டும் ரேவதிக்கு மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்துள்ளார். மகேஸ்வரனுக்கு பெங்களூருவில் வேலை கிடைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுவிட்டார்.
ரேவதி, சித்தப்பா வீட்டில் வசித்துவந்த நிலையில் பெங்களூருவிலிருந்து மகேஸ்வரன் நேற்று இரவு ரேவதியிடம் செல்போனில் பேசியுள்ளார். வீட்டில் சிக்னல் கிடைக்காததால் அவர் அருகில் உள்ள சுட்டகுண்டா மலைப்பகுதி முன்பு நின்று பேசியுள்ளார்.
இதனையடுத்து நீண்டநேரமாகியும் ரேவதி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த செல்வம் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காலையில் சுட்டகுண்டா மலைப்பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற ஒருவர், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் உடல் கிடப்பதாகக் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை