சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக, நேபாள நாட்டைச் சேர்ந்த அம்ரிதி ராய்(35), தனது கணவர் பாத்பிராய் தரனுடன் நேற்று வேலூர் விடுதியில் தங்கியுள்ளனர். பிறகு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து விட்டு, அருகில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, பின்னர் ஆட்டோவில் விடுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அம்ரிதி ராய், தான் கையில் வைத்திருந்த கைப்பையை ஆட்டோவில் தவற விட்டுள்ளார். பிறகு ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆட்டோவில் கைப்பை கிடப்பதைக் கண்டு, அதை திறந்து பார்த்தபோது அதில் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணம், ஏடிஎம் கார்டுகள், மருத்துவ குறிப்புகள், விலை உயர்ந்த பொருட்கள் இருந்துள்ளன. உடனடியாக அதை எடுத்துக்கொண்டு வேலூர் வடக்கு காவல் நிலையம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆய்வாளர் நாகராஜனிடம் தகவலைக் கூறி, அந்த கைப்பையை ஒப்படைத்தார்.
இதற்கிடையில், அம்ரிதி ராய் தனது கைப்பை காணாமல் போனதாக, வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கொடுத்த கைப்பையை அம்ரிதி ராயிடம் காண்பித்தபோது, இது தன்னுடையது தான் என உறுதி செய்தார் .
பின்னர், ஆட்டோ ஓட்டுநர் சரவணின் நேர்மையான செயலைப் பாராட்டி, ஆய்வாளர் நாகராஜ் அவருக்கு சன்மானம் வழங்கி, சால்வை போர்த்தி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு