வேலூர்: வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இரு மாவட்ட போலீசாரும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். கோயிலில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளயனை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோயில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த உமேஷ் (44) என்பவரை திருப்பதியில் வைத்து பர்கூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வெள்ளி மற்றும் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வேலூர் தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரி கிளை சிறையில் இருந்த உமேஷை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வேலூர் சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில், சாத்துமதுரை முருகன் கோயில், பள்ளிகொண்டாவில் உள்ள நாக ஈஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் உமேஷ் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து உமேஷ் பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 1.5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "உமேஷ் ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். கரோனா காலகட்டத்தில் துணி வியாபாரத்தில் அவருக்கு போதுமான வருமானம் இல்லை என்பதால் திருட திட்டமிட்டுள்ளார். பகலில் துணி வியாபாரம் செய்வது போல பல்வேறு இடங்களுக்கு சென்று கோயில்களை நோட்டமிட்டு, இரவில் அக்கோயில்களுக்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, கோயிலில் கொள்ளையடித்துள்ளார். இதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி பள்ளிகொண்டா கோயிலிலும், ஜூலை மாதம் 22ஆம் தேதி சாத்து மதுரையில் உள்ள கோயிலிலும், நவம்பர் மாதம் 22ஆம் தேதி சத்துவாச்சாரி கோயிலிலும் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளார்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மனைவி, மகளை தாக்கி விட்டு மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: பின்னணி என்ன?