வேலூர் காகித பட்டறை பகுதி முருகன் கோவில் அருகில் தனியார் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு நின்றுகொண்டிருந்தார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் அவ்வழியாக வந்த காவல் துறையினர் அவரை விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார். காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியதையடுத்து, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆய்வாளர் செந்தில்குமார் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் மேலும் இரண்டு பேருக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காகித பட்டறையைச் சேர்ந்த தினேஷ் குமார் (23), ஆனந்த் (24), 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர். இவர்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முழு ஊரடங்கு தினத்தில் மதுபானம் பதுக்கிய இளைஞர் கைது!