வேலூர்: வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்காக நாளை (ஜன. 29) நடக்கவுள்ள மாநிலம் தழுவிய போராட்டத்தில் வன்னியர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களின் கட்சி கொடிகளுடன் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் பாமகவின் கூட்டணி குறித்த நிலைப்பாடு ஜனவரி 31ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் வேலூரில் பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, "வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு நாளை (ஜன. 29) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம் பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வன்னியர்களும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் கரைவேட்டி, கொடிகளுடன் ஆர்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதில், கட்சிப் பாகுபாடு கிடையாது, அனைவரும் இதில் கலந்துகொள்வார்கள். மாற்று சமுதாயத்தினரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும், இல்லையேல் எங்களின் நிலைபாடு வேறுவிதமாக அமையும். வன்னியர்கள் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது அவர்களிடம் சமூக பார்வை இல்லாததை காட்டுகிறது. இதனை சமூக பார்வையுடன்தான் அணுக வேண்டும். கூட்டணி வரும் 31ஆம் தேதி தான் பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும். எங்களின் இலக்கு தற்போது இட ஒதுக்கீடு மட்டுமே, திமுக வன்னியர்களுக்கு எதுவும் செய்யவில்லை" என்றார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு குறித்து நல்ல முடிவு! - முதலமைச்சர் தெரிவித்ததாக அன்புமணி தகவல்!