வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வஞ்சூர் ஊராட்சியில் இன்று (ஜன.11) நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வி.கே.சிங், "நாட்டில் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகப் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும் வீடு, கழிப்பறை, இலவச எரிவாயு, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு விவசாயிகள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பிணையும் இல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் பத்தாயிரம் முதல் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி எதிர்பார்ப்பது, வரும் ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான். அதற்காகவே லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு வாகனம் நாடு முழுவதும் சுற்றி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில், 247 பஞ்சாயத்துகளில் இதுவரை, 169 பஞ்சாயத்துகளில் இந்த பிரசார வாகனம் சென்று வந்துள்ளது. இந்தியாவில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த வாகனம் வந்துள்ளது. நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம் அதை நீங்களும் பங்கு பெற்று பயன் அடைந்து உள்ளீர்கள்.
நல்ல சாலை, சிறந்த ரயில் போக்குவரத்து, நவீன பள்ளிகள் வர இருக்கிறது. உங்கள் வாழ்க்கையை விட உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப் படி இந்தியாவில் நான்கு சாதிகள் மட்டும்தான் இருக்கிறது.
அது மகளிர், இளைஞர்கள், விவசாயி, ஏழை இது தவிர எந்த சாதியும் கிடையாது. அதன் அடிப்படையில் தான் பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்" என பேசினார்.
இதையும் படிங்க: அனுமன் ஜெயந்தி: கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்குச் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு!