வேலூர்: குடியாத்தம் நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.
இவர் கடந்த ஆக.25 ஆம் தேதி குடியாத்தம்-சித்தூர் சாலையில் உள்ள பிச்சனூர்பேட்டை அருகே, மழை பெய்து கொண்டிருக்கும் போது நடக்க முடியாமல் ஊர்ந்து சென்று சாலையைக் கடக்க முயன்றுள்ளார். பல வாகன ஓட்டிகள் அவரை கடந்து சென்றுள்ளனர். அங்கிருந்த பொது மக்கள் கூட மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை.
விபத்துக்கு பின் உதவி
இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதுவரை உதவ முன்வராத பொதுமக்கள், மூதாட்டி மீது கார் மோதியதையடுத்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
உடற்கூராய்விற்குப் பின்னர் குடியாத்தம் நகர காவல் துறையினரும், குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தினரும் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் நகர காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராக்கெட் குண்டு தாக்குதல் - தொடர்ந்து குறிவைக்கப்படும் காபூல் விமான நிலையம்