வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளியான இவர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். முன்னதாக, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சென்னை புழல் சிறைக்கு இவர் மாற்றப்பட்டார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தை குயில்தாசனை பார்க்கவும் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பேரறிவாளனுக்குப் பரோல் வழங்க தமிழ்நாடு அரசுக்கு அவரது தாய் அற்புதம்மாள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று 12 மணி அளவில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குச் சென்றார்.
இதனால், பேரறிவாளன் வீடு, அதைச் சுற்றியுள்ள பகுதியில் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் நாளான இன்று ஜோலார்பேட்டை காவல் துறையின் பதிவேட்டில் தனது இல்லத்திலிருந்தபடியே பேரறிவாளன் கையொப்பமிட்டார். கடந்த 27ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவர் பரோலில் வெளிவந்துள்ளார்.
இதையும் படிங்க: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு