வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியாம்பட்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 35 ஆண்டுக்கு முன்னர், ஊரின் மைய பகுதியில் அரசு சார்பில் குடிநீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது . அது உரிய பராமரிப்பின்றி தற்போது பழுதடைந்துள்ளது.
இந்த நீர் தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதியதாக கட்டக்கோரி ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நீர் தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதியதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீர் தேக்கத் தொட்டி கட்டும் இடத்திற்கு பின்புறமாக 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு முறையாக சாலை வசதி இல்லாத சூழ்நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக தற்போது கட்டப்படும் நீர் தேக்கத் தொட்டியை வேறு இடத்தில் கட்டினால், அவர்களுக்கு சாலை வசதி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
அந்த ஊரில் வசிக்கும் சிலர் நீர் தேக்கத் தொட்டி அமைக்க மாற்று இடம் நாங்கள் தருகிறோம் என்று பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு செவி சாய்க்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டி நேற்று குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் ஒன்று சேர்ந்ததால், அங்கு கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதே இடத்தில்தான் நீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை காவல்துறையினர் கலைந்து போகச் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகளுக்கு இடையே நடைப்பெறும் அரசியல் பிரச்சனை என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.