திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தில் கடந்த ஆண்டு மோசஸ் என்பவர் குடிசை ஒன்றை அமைத்து அதில் கிறிஸ்தவ ஜப கூட்டம் நடத்தி பொதுமக்களை மதம் மாறக் கோரி வற்புறுத்தியதாகவும், இந்து கோயில்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் இவரால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் இந்த ஜபகூடத்தை இங்கு நடத்தக் கூடாது என கிராம மக்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மோசஸ் தனது ஜப கூடத்தில் ஒலிபெருக்கி அமைத்து வெளி ஊரில் இருந்து மதபோதகர்களை அழைத்து வந்து கிருஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதி மக்கள் வெளியூர் நபர்களை ஊருக்குள் அழைத்து வரக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒலிபெருக்கி அமைக்க வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாக மோசஸ் தரப்பில் கூறியதையடுத்து, காவல் துறையினர் சம்பந்திகுப்பம் மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து சமந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், அருள் குமார் ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட ஊர் பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என காவல் துறையினர் தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வாணியம்பாடி - ஆம்பூர் கிராம சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சம்பவ இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
காவல்துறையினர் அழைத்துச் சென்ற சக்திவேல், அருள் குமார் ஆகியோரை விடுவிப்பதாக உறுதி அளித்தை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் மதுபான கடைக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு