வேலூர்: வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட லாங்கு பஜாரில் உள்ள கிருபானந்தவாரியார் சாலையில் மாநகராட்சியின் சார்பில், கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
இந்தப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சரிவர முடிக்காமல், ஆங்காங்கே மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். அதிகப்படியான சில்லரை வணிகம் நடைபெறும் இப்பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இப்படியான சூழலில், மூடாமல் விடப்பட்ட பள்ளங்களில் விழுந்து பலர் காயம் அடைந்து வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையருக்கு புகார் மனு அளித்து பலமாதங்களாகியும் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், பலமுறை அரசு அலுவலர்களிடம் கூறியும் கண்டுகொள்ளாததால் கிருபானந்தவாரியார் சாலையைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க நூதன முறையில் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
அதற்காக, "கால்வாயை மூடாமல், கழிவுநீர் பாதையை தூர்வாராமல், சுத்தம் செய்யாமல் திறந்தபடி விட்ட மாநகராட்சிக்கு நன்றி. பொதுமக்கள், வியாபாரிகள் மனு அளித்தும், அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு நன்றி" என்ற வாசகங்களுடன், பேனர் வைத்து, அதற்கு மாலை அணிவித்து, மூடாத கால்வாய் பகுதியில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து, மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வித்தியாசமான முறையில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதற்கு பின்னும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கே நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி: 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை