வேலூர் மாவட்டம் சங்கரன்பாளையத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவியர் விடுதியில் கரோனாவுக்கான பரிசோதனை வார்டு அமைக்க 40 படுக்கைகளை ஊழியர்கள் எடுத்துவந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை சமாதானப்படுத்தவந்த காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்கள் பகுதியில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்துவருவதாகவும், நோய் பாதிக்கப்பட்டவர்களைக் குடியிருப்புகளுக்கு மத்தியில் வைத்தால் மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்படும் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தற்போது மாணவியர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள வார்டுகளை அப்புறப்படுத்தி, மக்கள் கூட்டம் குறைவாக உள்ள இடத்தில் அமைக்குமாறும் ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், மாணவியர் விடுதியில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா பீதியில் கிளினீக்கை மூடிய மருத்துவர்!